செவ்வாய், 23 ஜூலை, 2013

சாதி செய்யும் சதி!


                  
                                                         சாதி செய்யும் சதி!                         
                                  ================================


நான் அவரை விரும்பிதான் கல்யாணம் செஞ்சுகிட்டேன் என்ற வார்த்தை நான் என் அம்மாவுடன்தான் இருக்கப்போறேன் என்ற வார்த்தையாக மாற இந்த ஆதிக்கச் சாதீய சமூகமும் அச்சாதிகளின் ஒரே பிரதிநிதி தான்தான் என்ற நினைப்போடு சாதீய வெறியாட்டம் போடும் பாட்டாளி மக்கள் கட்சியும் நடத்திய சதிச்செயல்கள் எத்தனை? தீண்டாமைத் தீ மீண்டுமொருமுறை தர்மபுரி தலித் மக்களை பொசுக்கி இருக்கிறது.

கடந்த அக்டோபரில் நடைபெற்ற இளவரசன் திவ்யா சாதிமறுப்புத் திருமணத்தை காரணம் காட்டி, திவ்யாவின் குடும்பத்தை சாதீய கட்டப்பஞ்சாயத்துக்களில் நிற்கவைத்து செய்த அவமானத்தால் நவம்பரில் திவ்யாவின் தந்தை மரணமடைந்தார். தற்போது இளவரசனின் மரணம் நடைபெற்றுள்ளது. இவ்விரு மரணங்களுமே இயற்கைக்கு மாறாக நடந்துள்ளது. இவ்விரு மரணங்களுமே சாதீய வெறியாட்டத்தின் தூண்டுதலில்தான் நடந்துள்ளது. தற்கொலைக்கு தூண்டுபவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அப்படியானால் தற்கொலைக்கு தூண்டியவர்கள் யார்?

நீதிமன்றம் எல்லா வழக்குகளிலும் சாட்சிகளையும் சம்பிரதாயங்களையும் வைத்து அணுகுவது போலவே சமூகத்தில் புரையோடி செல்லரித்துக் கொண்டுள்ள சாதீய கட்டுமான வழக்கையும் அணுகியிருப்பது வருத்தத்திற்குரிய விஷயமே.

திவ்யா இளவரசன் திருமணத்தின் விளைவாக தர்மபுரி மாவட்டத்தில் நத்தம், அண்ணாநகர், கொண்டாம்பட்டி உள்ளிட்ட தலித் கிராமங்கள் மீது கோரத்தாண்டவத்தை நடத்தி, அக்கிராமங்கள் அனைத்தும் தங்களுடைய உழைத்து சேர்த்த பணம், நகை, வீடு, வாகனம் அனைத்தையும் கொள்ளையடித்தனர். வீடுகளுக்கு தீ வைத்துக் கொளுத்தி மக்களை தெருவில் நிறுத்தியது சாதி வெறிக்கூட்டம். அம்மக்களுக்கு நிவாரணம் கோரி நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஒரு பெண் உயிரிழந்தார். இந்த தலித் கிராமங்களின் மீது நடைபெற்ற சாதி வெறியாட்டத்திற்கான பின்புலமும் பாட்டாளிமக்கள் கட்சியின் கொள்கைகளும் ஒத்துப்போவதை யாரும் மறுக்கமுடியாது.

இந்த கிராமங்களின் மீது நடைபெற்ற தாக்குதலுக்குப் பிறகு பாமக நிறுவனர் ராமதாஸ், தலித் அல்லாத ஆதிக்க சாதி அமைப்புகளை மாவட்டந்தோறும் கூட்டி சாதிவெறி பிரச்சாரத்தை நடத்தி தலித்துகளுக்கு எதிராக அனைத்து சாதியினரையும் திருப்பிவிட முனைந்த வெட்கக்கேடான விஷயத்தை செய்தார். கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் தங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்காத நிலையில், மீண்டும் சாதீய சாட்டையை கையிலெடுத்து சுழட்டி தங்களது அடையாள அரசியலைத் துவக்கியுள்ளார் ராமதாஸ்.

பொருளாதார கொள்கைகளில் நவீனமயத்தையும் சாதீய பண்பாட்டில் கரடுதட்டிய பிற்போக்குத் தனத்தையும் கொண்டு இயங்கும் பாட்டாளிமக்கள் கட்சியின் ராமதா, தங்களுக்கும் திவ்யா இளவரசன் பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கிறார். பிறகு ஏன் பாமகவின் வழக்கறிஞர் பிரிவின் பாலு ஆதிக்க சாதீயவாதிகளுக்காக திவ்யாவின் சார்பில் வாதாடிக்கொண்டிருக்கிறார் என்பதை ராமதா விளக்குவாரா?

சமூக சீர்திருத்தத்திற்காக இறுதி மூச்சுவரை போராடிய பெரியார், அம்பேத்கர், மார்க் படங்களை தேவைக்கேற்றப்படி தங்களது விளம்பரங்களில் போட்டுக்கொண்டு, ஜனநாயகம், சமத்துவம், சமூகநீதி, மனித உரிமைகள்தான் எங்கள் முழக்கம் என்று பாமக அறிவித்துக்கொள்கிறது. இந்த முழக்கங்களுக்கும் அவர்கள் செய்துகொண்டிருக்கும் செயல்களுக்கும் துளியாவது சம்பந்தம் இருக்கிறதா? திவ்யா இளவரசன் திருமணத்தில் இவர்கள் சொல்லிக்கொள்கிற இந்த முழக்கங்களுள் ஏதாவது ஒன்று ஒத்துப்போகிறதா?

தலித் இளைஞர்கள் ஜீன்ஸ் பேண்டும், கூலிங்கிளாசும், டி சர்ட்டும் போட்டுக்கொண்டு பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் பெண்களை மயக்கி காதல் நாடகமாடுகிறார்கள் என்று, சமூகநீதி போராளி என்று தன்னைத்தானே சொல்லிக்கொள்கிற ராமதா, இளவரசன் மரணத்திலாவது காதலில் நாடகமில்லை என்பதை உணர்வாரா?
மாமல்லபுரத்தில் நடைபெற்ற சித்திரை முழுநிலவு பொதுக்கூட்டத்தில் வன்னிய குலப்பெண்களை கலப்புத் திருமணம் செய்பவர்களை வெட்டுங்கடா, நம் சாதிப் பெண்களை வேறு சாதியில் திருமணம் செய்துவைத்தால் தொலைத்துவிடுவேன் என்ற காடுவெட்டி குருவின் சாதி வெறிப் பேச்சும் சமூகநீதிக்கான போராட்டத்தை தீவிரமாக நடத்திய தமிழகத்தை தலைக்குனிய வைக்கிறது.

இப்படிப்பட்ட நடவடிக்கைகளைக் கைகொள்ளும் பாமக ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலிலும் நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம் என கொக்கரித்துக் கொண்டிருக்கிறது. ஒருவேளை, இவர்கள் உண்மையிலேயே ஆட்சிக்கு வந்துவிட்டால் தமிழகத்தில் உள்ள தலித் மக்களின் நிலை?

இந்த விஷயத்தை வன்மையாகக் கண்டித்திருக்கவேண்டிய சமூக சீர்திருத்தத்தின் கதாநாயகர்களாக தன்னைக் காட்டிக்கொண்டிருக்கும் திமுகவும், அண்ணாதிமுகவும் தர்மபுரி மாவட்டத்திற்கும் தமிழகத்திற்கும் சம்பந்தமே இல்லாதது போல இருக்கிறார்கள். ஏனெனில் இந்த தலித் கிராமங்களில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டத்தில் திமுக மற்றும் அதிமுக பிரமுகர்களுக்கும் பங்கிருக்கிறது.

சாதிவெறி என்பது தமிழகத்தில் உள்ள இடதுசாரிகள் தவிர அநேகமாக மற்ற அனைத்து கட்சிகளிலும் ஆதிக்கம் செலுத்திவருகிறது. அதிமுகவின் இலக்கிய அணித்தலைவரும் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினருமான பழகருப்பையா, 
"...நகரத்தாருக்குரிய (செட்டியார்) அடையாளங்கள் எனச் சிலவற்றை ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். அவை நேர்மை, பக்தி, சிக்கனம், அறக்கொடை, திட்டமிடல். இந்த அடையாளங்கள் தொடரவேண்டுமென்றால் நாம் கலப்புத் திருமணத்தை முற்றிலுமாக எதிர்க்கவேண்டும். கலப்புத் திருமணம் செய்துகொள்வோரை நம் சமூகத்திலிருந்து தள்ளி வைக்கவேண்டும்..."
என்று கூறுகிறார். இவர் கூறும் அடையாளங்கள் அனைத்து சமூகங்களுக்கும் பொதுவானதுதானே. இவரின் பேச்சுக்கும் காடுவெட்டி குருவின் பேச்சுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது.
ஜனநாயக முற்போக்கு அறிவியல் சிந்தனை கொண்ட சமூக அமைப்புகளாலும் வர்க்க போராட்டத்தாலும் மட்டுமே சாதி பேதமற்ற சமூகத்தை உருவாக்கமுடியும்.

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் சாதிமறுப்பு திருமணம் நடைபெறுவது மிகவும் குறைவு. இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசர், பெரியார், சீனிவாசராவ் உள்ளிட்ட சமூக சீர்திருத்தவாதிகள் வழிகாட்டியாக வைத்திருந்த தமிழகத்தின் தற்போதைய நிலை இதுதான்.

இளவரசன் மரணத்திற்குப் பிறகு உற்சாகமடைந்துள்ள இந்த சாதீய அமைப்புகள் தர்மபுரி மாவட்டம் வேப்பமரத்தூர் கிராமத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டு ஒரு குழந்தையுடன் வாழ்ந்துகொண்டிருக்கின்ற காதல் தம்பதியினர் சுரேஷ் சுதாவின் பக்கம் திரும்பியுள்ளது. ஊர்பஞ்சாயத்தைக் கூட்டி இருவரும் பிரிந்துவிடும்படி மிரட்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இத்தம்பதியினரும் வழக்கம்போல் காவல்துறையினரின் பாதுகாப்பை நாடியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் விருத்தாசலத்தில் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்ட கண்ணகி, முருகேசன் இருவரையும் ஊர்மக்கள் முன்னிலையிலேயே விஷம் கொடுத்து துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டனர். இப்படி, கோவை சோமனூர் சிற்றரசு, தர்மபுரி சுகன்யா, ஈரோடு இளங்கோ, திருவண்ணாமலை துரை, பரமகுடி திருச்செல்வி, பழனி ஸ்ரீபிரியா, கடலூர் கோபாலகிருஷ்ணன், பண்ருட்டி பிரியா, உளுந்தூர்பேட்டை கண்ணன், தஞ்சை சதுரா, அரித்துவாரமங்கலம் சிவாஜி-லட்சுமி ஆகியோரை சாதீய சமூக கட்டமைப்பை காப்பாற்ற, திருமணம் செய்துகொண்டவர்களையும் விடாமல் விரட்டி விரட்டி உறவாடி அவர்களை நம்பவைத்து, கட்டப்பஞ்சாயத்து செய்து பெற்றவர்களை வைத்தே விஷம் கொடுத்து கொலை செய்தும், தற்கொலை செய்துகொள்ளச் சொல்லி நிர்ப்பந்தம் கொடுத்து கௌரவகொலை செய்யப்பட்ட காதல் ஜோடிகளின் பட்டியல்கள் நீண்டுகொண்டே போகும். பதிவான புகார்களில் சிலவற்றைதான் தந்துள்ளோம். பதிவாகாத கொலைப்பட்டியல்கள் இதைவிட 100 மடங்கு அதிகம்.

தமிழகத்தில் இந்துமுன்னணி, கர்நாடகாவில் ராம்சேனா, பாஜக போன்ற அமைப்புகளெல்லாம் தங்களை கலாச்சார காவலர்களாக காட்டிக்கொண்டு காதலர் தினத்தன்று காதலர்களுக்கு கட்டாய தாலி கட்ட வைப்பதும், காதலர்களை ஓடஓட விரட்டுவதும் சாதீய கட்டமைப்பு தகர்ந்து விடக்கூடாது என்பதற்காகவே. இவர்களிலிருந்து ஒரு படி அதிகமாக தங்களது சாதிக் கவுரத்தைக் காப்பாற்றுவதற்காக மனிதத் தன்மையை காற்றில் பறக்கவிட்டு கொஞ்சமும் ஈவிரக்கமின்றி கவுரவ கொலைகளை அரங்கேற்றிவரும் சாதிய சமூகம், வன்னியர் சங்கம், பாமக போன்ற அமைப்புகளும் பலவிதமான பண்பாட்டு கலாச்சாரத்துடன் பழகி வருகின்ற தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டுமா?

தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை மனிதத்தன்மையற்ற செயல் என்பதை பாட புத்தகங்களின் முகப்புப் பகுதியில் பதித்த அரசாங்கம் ஆதிக்கச் சாதிகளின் மனதில் பதிய வைக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? தமிழக மக்களின் பொது நீரோட்டத்திலிருந்து தலித் மக்களை பிளவுபடுத்தி அவர்களை தனிமைப்படுத்தும் ஆதிக்கச் சாதியினரையும் கட்சிகளையும் அடையாளம் கண்டு அவர்களை புறந்தள்ளவேண்டும். அனைத்து சாதியிலுமே கஞ்சிக்கில்லாமல் வறுமையில் உழலும் அப்பாவிமக்கள் இருக்கின்றனர். தமிழக மக்கள் அனைவரும் சாதி வேற்றுமைகளை மறந்து வர்க்கமாக ஒன்றுபட்டு இப்படிப்பட்ட சாதீயவாதிகளுக்கு எதிராக போர்தொடுக்க வேண்டிய கடமை நம் முன்னே உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக