வியாழன், 12 ஏப்ரல், 2018

தமிழகத்திலிருந்து விரட்டப்பட்ட மோடி

ஈராக்கில் ஷூ வீசப்பட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு அடுத்தபடியாக உலகம் முழுவதும் அதிக மக்கள் எதிர்க்கும் ஒரு மனிதர் இருக்கிறாரென்றால் அது மோடிதான். தன் சொந்த நாட்டு மக்களாலேயே கருப்புக்கொடி காட்டப்பட்டு மக்கள் முன்னிலையில் தலையைக்கூட காட்டாமல் தமிழகத்தை விட்டு தலைதெறிக்க ஓடிய பிரதமர் என்றால் அது மோடிதான்.

பாஜக 2014ல் ஆட்சியைப் பிடித்ததற்கு காரணம் பாஜக ஒரு நல்ல கட்சி என்பதாலோ, சிறந்த கொள்கைகளை வைத்துள்ள கட்சி என்பதாலோ, குஜராத்தில் தேனாறும் பாலாறும் ஓடவிட்டதாய் ஓலமிட்டவர்கள் என்பதாலோ அல்ல. மாறாக, காங்கிரசின் இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளாலும், இந்தியப் பொதுத்துறைகளை நாசப்படுத்தியதாலும், ஊழலின் உச்சக்கட்ட பேயாட்டம் போட்டதாலும், முழுக்க முழுக்க கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்கு சாமரம் வீசியதாலும் தான் பாஜக இந்தியாவில் ஆட்சி அமைக்க முடிந்தது. முன்பு வாஜ்பாய் அரசு எப்படி அமைந்தது என்ற கேள்விக்கும் மேற்கூறியதுதான் பதில். 

இந்திய மக்கள் அனைவருக்கும் மிகவும் நன்றாகவே தெரியும் 2002ல் மோடியின் குஜராத் பற்றி எரிந்ததும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களை ஈவிரக்கமின்றி கொன்றொழித்ததற்குப் பின்னால் மோடியும் அமித்ஷாவும் செயல்பட்டார்கள் என்பதும். 
மோடியும், அமித்ஷாவும் குஜராத் மதக்கலவர வழக்குகளிலிருந்து இந்திய நீதிமன்றங்களால் விடுபட்டபோதே இந்திய மக்களுக்கு நீதித்துறை மீதிருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் பாழானது.

நிற்க,  1983-ல் காவிரி தண்ணீருக்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது டெல்டா விவசாயிகள்தான். 19 ஆண்டுகள் தொடர்ந்த 21 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததையடுத்தே தன்னையும் அந்த வழக்கில் சேர்க்குமாறு மனு கொடுத்தது தமிழக அரசு. 1990-ல் நிறுவப்பட்ட காவிரி நடுவர் மன்றம் 17 ஆண்டுகள், 568 அமர்வுகளுக்குப் பிறகு 2007 பிப்ரவரி 5-ல் இறுதித் தீர்ப்பை வழங்கியது. தமிழகத்துக்கு 419 டி.எம்.சி., கர்நாடகத்துக்கு 270 டி.எம்.சி. கேரளத்துக்கு 30 டி.எம்.சி., புதுவைக்கு 7 டி.எம்.சி. என்று ஒதுக்கியது. தமிழகத்துக்கு உரிய 419 டி.எம்.சி.யில் மழைப் பொழிவின் மூலம் கிடைக்கும் அளவு கழிக்கப்பட்டு, 192 டி.எம்.சி.யானது. இந்த நீரின் அளவைத்தான் தற்போது 177.25 டி.எம்.சி.யாகக் குறைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். அதைப்போல, பெங்களூருவின் குடிநீர்த் தேவையைக் கருத்தில் கொண்டு 14.75 டி.எம்.சி. கூடுதலாக வழங்கப்படுகிறது. (தமிழகத்தில் உள்ள மாநகரங்களைப் பற்றி எந்த சிந்தனையும் நீதிபதிகளுக்கு வரவில்லை) இதுவரை நிலுவையில் இருந்த அனைத்து காவிரி நதிநீர் வழக்குகளும் இந்த உத்தரவின் மூலம் முடித்து வைக்கப்படுகின்றன. அடுத்த 15 ஆண்டுகளுக்கு இந்தத் தீர்ப்பு அமலில் இருக்கும். மேல் முறையீடு செய்ய முடியாது என்றும் இத்தீர்ப்பை ஆறு வாரங்களுக்குள் அமல்படுத்தவேண்டும். 

அத்தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் எவ்வாறு அமைக்கவேண்டும்? அதில் யார் யார் இருக்க வேண்டும், என்னென்ன பொறுப்புகள் இருக்க வேண்டும், என்ன படித்திருக்க வேண்டும் என்பது உட்பட காவிரி ஒழுங்காற்று குழுவில் தொழில்நுட்ப வல்லுனர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது உட்பட தெளிவான தீர்ப்பு அளித்த பிறகும் மத்திய பாஜக மோடி அரசு அதனை ஒரு பொருட்டாகவே கொள்ளாமல் கெடு காலம் முடியும் தேதியான 29.3.2018 அன்று 'ஸ்கீம்' என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டும், கர்நாடக தேர்தல் நடைபெறவிருப்பதால் அங்கு இத்தீர்ப்பை அமல்படுத்தும்போது கலவரச்சூழல் ஏற்படும் என்றும், நர்மதா வாட்டர் அத்தாரிட்டி போன்று ஒன்றை ஏற்படுத்திக்கொள்ளலாமா என்றும் விளக்கம் கேட்டு காலம் தாழ்த்தியுள்ளது மத்திய அரசு. 

தமிழகத்தில் நீட் தேர்வை நடத்தக்கூடாது என்று தமிழகம் முழுவதும் மாணவர்கள் எழுச்சியாக போராடிய நிலையில்  தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வில் விலக்கு கேட்டு  ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அத்தீர்மானம் குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேட்கப்பட்டபோது "அது எங்கே இருக்கிறது என்பது எனக்கு தெரியாது" என்று திமிர்த்தனமான பதிலை கூறினார். 

தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடத்தக்கூடாது, கூடங்குளம் அணு உலை வேண்டாம், ஹைட்ரோ கார்பன் எடுக்கக்கூடாது, மீதேன் எடுக்கக்கூடாது, விவசாயிகளின் நிலத்தில் கெயில் குழாய் பதிக்கக்கூடாது, நியூட்ரினோ திட்டம் கூடாது என்று மக்கள், மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டு ஆண்டுக்கணக்கில் போராடி வருகின்றனர். 

ஆனால், அதையெல்லாம் உச்சநீதிமன்ற உத்தரவுகளைக் காரணமாகக் காட்டி 
மோடியின் அடிமை ஆட்சி செய்யும் எடப்பாடியை வைத்துக்கொண்டு தமிழர்கள் மீது காவல்துறை மூலம் ஒடுக்குமுறை செய்து வலுக்கட்டாயமாக திணித்தது மோடி அரசு.

ஆனால், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் கொடுத்த பிறகும் அதைமட்டும் செய்ய மோடி அரசு மறுப்பதற்குப் பின்னால் தமிழகம் பல  பயங்கர விளைவுகளை  சந்திக்கவிருப்பதாகவே தோன்றுகிறது. 

தமிழ்நாட்டை விவசாயத்திலிருந்து முற்றிலும் துரத்திவிட்டு இங்கு ராணுவ தளவாட பகுதியாக்க மத்திய அரசு முனைவதாக தோன்றுகிறது. பாகிஸ்தான் மற்றும் சீனாவின் இலக்குகளுலிருந்து  தமிழகம் வெகுதொலைவியில் இருப்பதால் விவசாயத்தைப் புறந்தள்ளி தமிழகம் ராணுவ பாதுகாப்பு பகுதியாக்க மோடி அரசு முயற்சிக்கிறது. ஆயுதங்கள் தயாரிக்க, ஆயுதங்கள் இருப்பு வைக்க, பகிர்ந்தளிக்க கடல்வழியைப் பயன்படுத்த என தமிழகத்தை ஆயுத களமாக்க பாஜக அரசு முயற்சிக்கிறது என்ற சந்தேகம் வலுத்துவருகிறது. 

காவிரிமேலாண்மை வாரியம் அமைத்தால் காவிரி வழி நீரோடி தமிழகம் விவசாய செழிப்புற்றால் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து மக்கள் வெளியேறமாட்டார்கள் என்பதால் காவிரியை காய்ந்துபோக திட்டமிடுகிறது மத்திய அரசு. 

விவசாயம் பொய்த்து வறுமையால் வேலைதேடி இருக்கும் சொற்ப நிலங்களை விற்றுத்தொலைத்துவிட்டு வெளியேற வேண்டிய சூழலை இந்த மாவட்ட மக்களுக்கு மத்திய அரசு வலிந்து நிர்ப்பந்திக்கிறது. 

அதே நேரத்தில், பாஜக தென்னகத்தில் ஆட்சிக்கு வருவதற்கு கர்நாடகம் சாத்தியமான மாநிலம் என்ற போதிலும் காவிரி மேலாண்மைவாரியம் அமைக்காமல் இருப்பதற்கு அதைவிட பெரிய மேற்கண்ட மெகா பிராஜெக்ட் இருப்பதையே மோடியின் 12.4.2018 வருகை காட்டுகிறது. 

இந்த நிலையில் தமிழகத்தில் போராட்டக்களம் சூடு பிடித்திருக்கிறது. திராவிட கட்சிகள் (அதிமுக திராவிட கட்சியல்ல) கம்யூனிஸ்டுகள் உட்பட அனைத்துக் கட்சியினரும் போராடும் அதே வேளையில் திரையுலகத்தினர் மற்றும் தமிழ்த்தேசிய அமைப்புகளும் களத்தில் இறங்கி போராட்டத்தை கூர்மையாக்கியுள்ளது. 
இவ்வளவு போராட்டத்தையும் மயிரளவுகூட மதிக்காத போக்கு மத்திய அரசிடம் தெளிவாக தெரிகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்போம் என்று மோடியும், மத்திய அரசும் எந்தவித அறிக்கையும் விடாத நிலையில் தமிழக பாஜக தலைவர்கள் வாரியம் அமைக்கப்படும் என்று தமிழக மக்களை ஏமாற்றி வருவது வேடிக்கையாக உள்ளது.

கர்நாடக பாஜக அம்மக்களுக்கு சாதகமாய் இருப்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. தமிழக பாஜகவும் கர்நாடகத்துக்கு சாதகமாய் பேசும் கொடுமையை என்னவென்று புரிந்துகொள்வது? 

இறுதியாக ஒன்றுதான் புரிந்துகொள்ள முடிகிறது. பாஜக ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் எதிரான கட்சி. குறிப்பாக தமிழகத்தை சுடுகாடாக்க பாஜக கடுமையாக முயன்று வருகிறது. தமிழக மக்களை பாதுகாக்க  தமிழகத்திலிருந்து மட்டுமல்ல இந்திய அரசியலிலிருந்தே  பாஜகவை விரட்டி அடிப்பது ஒன்றே வழி!

-இரா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக