புதன், 27 ஜூலை, 2016

கபாலி வெற்றி யாருக்கு?

கபாலி வெற்றி யாருக்கு?

கபாலி வெற்றி யாருக்கு?

சிகெரட்டை தூக்கிப்போட்டுப் பிடிக்கும் காட்சி இல்லை. தலைமுடியை அவ்வபோது கோதிக்கொண்டிருக்கும் காட்சிகள் இல்லை, பெண்களின் அடக்கத்திற்கு அறிவுரை கூறவில்லை,  'நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வந்துடுவேன், ஒருதடவ சொன்னா நூறுதடவ சொன்னமாதிர், ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான்' என்பது போன்ற வெட்டி பஞ்ச் டயலாக் இல்லை.  ஒரு கதாபாத்திரமாக மட்டுமே நடித்துள்ள ரஜினியை ரசிக்காமல் இருக்கமுடியவில்லை.

நல்ல கதையும் கதாபாத்திரமும் அமையும் போது ஓட்டு வேலை தேவையில்லை. இதுநாள்வரை அப்படிப்பட்ட ஒட்டு வேலைக்கான உதாரணம்தான் மேலே சொன்ன அந்த ஒட்டுகள்.
தமிழகத்திலிருந்து தோட்டத்தொழிலுக்காக மலேசியா சென்றவர்களின் வாழ்வியல் சூழல்,  அடக்குமுறைக்கு எதிராக போராடும் போராளி, இல்ல ஒரு தாதா எப்படியாவது வைத்துக்கொள்ளுங்கள்.
சமத்துவம் அடக்குமுறை என்று பேசத் துவங்கிவிட்டால் சாதியத்தை பேசாமல் எப்படி இருக்கமுடியும்? அதன் அடையாளமான அம்பேத்கரை, காந்தியை எப்படி பேசாமல் இருக்கமுடியும்? அவ்விருவரும் அணிந்த ஆடைகளுக்கான காரணங்களைப் பற்றி எப்படி பேசாமல் இருக்கமுடியும்?

மேல்சாதி ஆணவத்தைத் தாங்கிப்பிடிக்கிற, மீசையின் பாரம்பரியம் பேசுகிற (மீசையின் பாரம்பரியம் என்றதும் ஆதவன் தீட்சண்யாவின்  "மீசை என்பது வெறும் மயிர்'  நினைவுக்கு வருகிறது)  பல திரைப்படங்களை விமர்சனம் செய்யும்போது, ஏன் ஒரு சாதியை தூக்கிப்பிடித்து மறு சாதியை தாழ்த்துகிறாய் என்று கேட்க தினமணிக்கு வக்கில்லை.

சேரிகள் என்றாலே குடிசையும் குப்பைகளும், சாக்கடையும், மூத்திரவாடையும், அங்கு வாழ்கிறவர்கள் பிக்பாக்கெட், ரவுடித்தனம் செய்து பிழைப்பு நடத்துபவர்கள் என்று சினிமாவில் பார்த்து பார்த்து அதுதான் உண்மை என்பதுபோல பழகிப்போன ஒன்றாகிவிட்டது.

மெட்ராஸ் திரைப்படம் அந்த பிம்பத்தை உடைத்து  அரசியல் பேசியது. அதே அரசியலை கபாலியும் பேசியது. அவ்வளவுதான் அதற்கு வைரமுத்து தேவரிலிருந்து வைத்தியநாத ஐயர் வரை படம் வந்து ரெண்டே நாட்களில் வானுக்கும் பூமிக்கும் குதித்து தங்களது அரிப்பினை தீர்த்துக் கொண்டனர்.
தினமணி ஒரு படி மேலே போய் அசிங்கமான முறையில் தனிமனித தாக்குதலில் விமர்சனம் செய்யும் கீழ்த்தரமான செயலில் இறங்கியது.
எது அவர்களை அவ்வாறு குதிக்கச் செய்தது?
ஆதிக்க வெறி என்பதைத்தவிர இதில் வேறு ஏதுமில்லை. ஆயிரமாயிரம் ஆண்டு காலம் அடிமைச் சமூகம் கல்வி, திறன், பொருளாதாரம், அறிவு இவற்றிலிருந்து மேலெழுந்து வருவதை சகிக்கமுடியாததன் விளைவே தினமணி கதறல். ரஜினி சொல்வது போல் உனக்கு எரியுதுன்னா நான் கோட் போடுவேன், உனக்கு புடிக்கல்லன்னா போய் சாவுடா...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக