புதன், 26 அக்டோபர், 2016

காஷ்மீரும் ... கண்டுகொள்ளாத இந்திய மக்களும்...!

காஷ்மீரும் ...கண்டுகொள்ளாத இந்திய மக்களும்...!

இந்தியாவில் ஒவ்வொரு அரசுக்கும் தங்களது தேசப்பற்றை நிலைநாட்ட, உள்நாட்டில் மக்களுக்கு ஏற்படும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், வேலைபறிப்பு போன்ற அவர்களை சீரழிக்கும் வாழ்வியல் பிரச்சனைகளிலிருந்து அவர்களை திசைதிருப்ப, தங்களது ஆட்சியின் ராணுவ வலிமையை நிலைநாட்ட ஒரு போர் தேவைப்படுகிறது. ஆனால், உண்மையில் சொல்லப்போனால் ராணுவத்தின் வலிமை என்பது எப்போதும் எந்த சூழ்நிலையிலும் நிலையானது. அதனை எந்த ஒரு தனி அரசும் எப்போதும் சொந்தம் கொண்டாட முடியாது. ஆனால், அந்த ராணுவ வலிமை தங்களது ஆட்சியில்தான் புதிதாக உருவாக்குவது போன்ற தோற்றத்தை ஒவ்வொரு அரசும் உருவாக்கிக்கொள்ளும்.
இவ்வுலகின் அனைத்து நாடுகளும் அணு ஆயுதம் உட்பட ஆயுதக்குவியலில் மூழ்கித் திளைத்திருக்கும்போது, நாடுகளுக்கிடையேயான போர் எத்தகைய சேதத்தை ஏற்படுத்தும் என்பதை நினைத்துப்பார்க்கவும் முடியாது. எனவே, எந்த ஒரு பிரச்சனைக்கும் போர் ஒரு தீர்வாகாது, தீர்வாக ஆகவும் முடியாது.
இந்த நிலையில் செப்டம்பர் 18 அன்று காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் உரி என்ற இடத்தில் இந்திய ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இந்திய ராணுவ வீரர்கள் 18 பேர் உயிரிழந்தனர். இந்திய ராணுவம் திருப்பித் தாக்கியதில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதன் பின்னணியில் பாகிதான் உள்ளது என்பதை ஆதாரங்களோடு இந்தியா உலக அரங்கிற்கு உணர்த்தியது. உலக அரங்கிலிருந்து பாகிதானை தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது. இதற்குப் பதிலடியாக பாகிதான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் சென்று செப்டம்பர் 29 அன்று சர்ஜிகல் டிரைக் என்ற பெயரில் அறுவை சிகிச்சை செய்து 55 தீவிரவாதிகளையும், 7 தீவிரவாத முகாம்களை அழித்துவிட்டு திரும்பி வந்ததாக ராணுவ தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த வெற்றிக்கு மோடி அரசே காரணம் என்று பாஜக வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்பு பாஜக ஆட்சியில் நடைபெற்ற கார்கில் போர் வெற்றியை இன்றுவரை கொண்டாடி வருகின்றனர். கார்கில் போரில் 527 பேர், சர்ஜிகல் டிரைக்கில் 18 பேர் மட்டுமல்லாது இன்றுவரை தீவிரவாதிகளின் ஊடுருவலால் ஏற்படும் இந்திய வீரர்களின் உயிரிழப்பை விட பாஜகவினருக்கு வெற்றிக் கொண்டாட்டங்களே பெரிதாக தேவைப்படுகிறது.
உள்நாட்டில் இருக்கும் ஏற்றத்தாழ்வாக இருக்கும் சமூக, பொருளாதார, வாழ்வியல்பிரச்சனைகள், விலைவாசி உயர்வு பிரச்சனை, வேலையில்லா திண்டாட்டப் பிரச்சனைகளை திசைத்திருப்ப இப்படிப்பட்ட தேசப்பற்று கொண்டாட்டங்கள் ஆட்சியாளர்களுக்கு தேவைப்படுகிறது.
இதுஒருபுறம் இருக்க, இப்படிப்பட்ட போர்ச்சூழல்கள், தீவிரவாத ஊடுருவல்கள் கட்டுப்படுத்துவது போன்றவற்றிற்கு காரணமாக இருக்கக்கூடிய காஷ்மீர் பிரச்சனையை திறந்த மனதோடு அணுகவேண்டும், இந்தியா பாகிதான் பிரச்சனையை பேசித் தீர்க்க வேண்டும் என்ற கருத்துக்களை முன்வைப்பவர்களை தேசத்துரோகியாக சித்தரிக்கும் வேலையை பாஜக செய்து வருகிறது.
அந்த வகையில் 2014ல் ஆட்சிக்கு வந்த பாஜக, இதுவரை இந்திய மக்கள் தேசப்பற்று என்றால் என்னவென்று தெரியாமல் இருந்தது போலவும், தீடீரென மக்களுக்கு தேசப்பற்று பாடம் எடுக்கவும் தொடங்கியுள்ளது.
தேசப்பற்று என்பது இந்து மதத்தினருக்கு மட்டுமே சொந்தமானது போலவும் மற்ற மதத்தினருக்கு தேசப்பற்று இல்லாதது போலவும் சித்தரிக்கத் தொடங்கி, மதத்தை அரசியலுடன் கலந்து, தேசப்பற்றுடனும் கலந்தது. அதனை, மத வேற்றுமை பாராமல் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் மக்களிடையே பிரச்சாரமாக பாஜக கொண்டு சென்று மக்களை பிரித்தாள சூழ்ச்சி செய்கிறது.
அதன் வெளிப்பாடு, மத அடிப்படைவாதத்தை எதிர்த்தால், மூடநம்பிக்கையை எதிர்த்தால் அது தேசத்தை எதிர்த்தது போலவும் தேசத்துரோகியைப் போலவும் நடத்தப்பட்டு வருகின்றனர்.
தேசப்பற்று என்பது இந்தியா பாகிதான் கிரிக்கெட் போட்டியில் துவங்கி, இன்று நேரடிப் போர் வரைக்கும் காரணமான காஷ்மீர் பிரச்சனையை காரணம் காட்டி இந்திய மக்களுக்கு பாகிதான் மீது வெறியேற்றுவதும், அதே காஷ்மீர் பிரச்சனையை காரணம் காட்டி பாகிதான் மக்களுக்கு இந்தியா மீது வெறியேற்றுவதும் இருநாடுகளுமே தவறாமல் கடைபிடிக்கும் கொள்கைகளாகவே இருந்து வருகிறது. இதில் பாஜக ஆட்சி, காங்கிர ஆட்சி என்ற வேறுபாடில்லை.
இந்தியா பாகிதான் ஆகிய இருநாடுகளுமே உலகமய, தாராளமய, தனியார்மய கொள்கைகளை மிகவும் அதி தீவிரமாக செயல்படுத்தி வரும் அரசுகளையே கொண்டுள்ளன. இந்திய பிரதமர் பெரும் கார்ப்பரேட் முதலாளியான அதானிக்கு சொந்தமான விமானத்தை தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதற்கும், மோடி பதவியேற்பு விழாவிற்கு பாகிதான் பிரதமர் நவாப்ஷெரீபிற்கு அழைப்பு விடுத்தத்தற்குமான காரணத்தை இந்திய சாமானிய மக்கள் புரிந்துகொள்வது மிகவும் கடினம்தான்.
குஜராத்தை ஒட்டியுள்ள பாகிதானுக்கு சொந்தமான மின்னுற்பத்தி நிலையங்களை உலகமயக் கொள்கைகளின்படி தனியார்மயப்படுத்துவதற்கு பாகிதான் எடுத்துள்ள முடிவையொட்டி அந்த மின்னுற்பத்தி நிலையங்களை அதானி குழுமம் வாங்குவதற்கான எடுக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.
பாகிதான் அதன் மாநில அரசுகளின் பொறுப்பில் உள்ள 35சதமான எண்ணெய் நிறுவனங்களை தனியார்மயப்படுத்த எடுத்த முடிவின் அடிப்படையில் இந்திய கார்ப்பரேட் முதலாளியான அம்பானி அந்த நிறுவனங்களை வாங்க முயற்சி எடுக்கிறது.
அதேபோல் பாகிதான் டீல் மில்களை வாங்க இந்திய பெருமுதலாளியான ரத்தன் டாட்டா முயன்று வருகிறார். இதுபோன்று பல இந்திய பெருமுதலாளிகள் பாகிதானில் தொழில் தொடங்க எடுக்கும் முயற்சியையும் எப்படி புரிந்துகொள்வது. அப்படியென்றால் தேசப்பற்று என்பது யாருக்கு?
தேசபக்தி, தேசப்பற்று என்பதெல்லாம் இந்திய அன்றாடங்காய்ச்சி மக்களுக்குதானே தவிர, இந்திய கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கல்ல. இந்தியா-பாகிதான் என்றால் இந்திய அன்றாடங் காய்ச்சிகளுக்குதான் ரத்தமெல்லாம் கொதிக்குமே தவிர இந்திய பெருமுதலாளிகளைப் பொருத்தவரை பணம் கொழிக்கும் இருநாட்டு ஒப்பந்தங்கள்தான்.
இப்படி சாமானியனின் ரத்தம் கொதிப்பதற்கு ஒரே காரணம், காஷ்மீர். இந்திய மக்களைப் பொருத்தவரை காஷ்மீர் என்பது இந்தியாவின் ஏனைய மாநிலங்களுள் ஒன்றினைப்போலவே என்ற சிந்தனை இந்திய மக்களின் மனதில் பதியவைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் காஷ்மீருக்கும் உள்ள வித்தியாசத்தை இருட்டடிப்பு செய்வதன் விளைவாக காஷ்மீர் மக்களுக்கு இந்திய மக்களின் ஆதரவு கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. சுதந்திரத்திற்கு முன்னர் பல்வேறு மன்னர்களின் ஆளுமைக்கு கீழ் இருந்துவந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஆம் ஆண்டு, இந்தியா உடன் இணைப்பதா, பாகிஸ்தானுடன் இணைப்பதா அல்லது தனி நாடாக செயல்படுவதா என்ற குழப்பம் நிலவிய போது காஷ்மீரின் மன்னராக இருந்த ஹரிசிங் மன்னராக இருந்தபோது அரசியல் சட்டப்பிரிவு 370 ஐ உருவாக்கி இந்தியாவுடன் காஷ்மீர் சில நிபந்தனைகளின் பேரில் இணைந்திருப்பது என்று ஒப்பந்தமானது. அதன்படி, இந்திய அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவின் சிறப்பு அந்ததின்படி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டுமே பெருமளவில் மாநில சுயாட்சியை கொடுத்துள்ளது. இதன்படி, இந்திய பாராளுமன்றத்தில் ராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு விவகாரம், ஆகிய துறைகளை தவிர்த்து மற்ற துறைகளில் இயற்றப்படும் எந்த சட்டமும் ஜம்மு காஷ்மீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி அம்மாநிலத்தில் செல்லாது. காஷ்மீரில் பதட்டமான சூழ்நிலை தணிந்த பின், தனித்திருப்பதா? இந்தியாவுடன் இணைவதா? பாகிஸ்தானுடன் இணைவதா என்று காஷ்மீர் மக்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி அதன்படி செயல்படுவது,
மேலும், இந்திய மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டுமே தனிக்கொடியும், தனி அரசியல் சாசனம், பிற மாநிலங்களைச் சார்ந்த மக்கள் காஷ்மீரில் நிலம் முதலான அசையா சொத்து வாங்கமுடியாது, ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்றத்தின் பதவி காலம் ஆறு ஆண்டுகள் ஆகும், மற்ற இந்திய மாநிலங்களின் சட்டமன்ற காலம் 5 ஆண்டுகளாகும். அரசியல் சாசனத்தின் 238 வது பிரிவு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பொருந்தாது. காஷ்மீர் மாநிலத்தில் எல்லைகளைக் கூட்டவோ குறைக்கவோ முடியாது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 21 வது பகுதியில் திருத்தம் செய்து தற்காலிக மற்றும் மாறுதலுக்கு உட்படுத்துதலின் கீழ் 370 வது பிரிவு வரையறுக்கப்பட்டது.
இப்படி சில நிபந்தனைகளின் அடிப்படையில் இணைந்த அந்த மக்களின் மீது தீவிரவாத ஊடுருவல் என்ற காரணத்தைக் காட்டி இந்திய அரசு தங்களது ராணுவ வலிமையைக்கொண்டும், சிறப்பு ஆயுதப்படை அதிகாரத்தைக் கொண்டும் அந்த மக்களை கடுமையான அடக்குமுறைக்கு உட்படுத்துவதும், தீவிரவாதி என பொய்க்காரணங்கள் கூறி அப்பாவி மக்கள் கொல்லப்படுவதும், பெண்களை வன்புணர்வு செய்வதும் என வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதை எப்படி மனிதத்தன்மையோடு ஏற்றுக்கொள்ள முடியும்.
Image result for kashmir bellot attack victims இந்த 70 வருடங்களில் 1லட்சம் காஷ்மீர் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். அங்கு 7 பேருக்கு ஒரு ராணுவ வீரர் என்ற அடிப்படையில் இருக்கின்றனர். காஷ்மீர் மக்கள் சிறப்பு ஆயுதப்படை அதிகாரத்தை திரும்பப்பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 80 நாட்களுக்கும் மேல் நடைபெற்றுவரும் போராட்டத்தில் இதுவரை 88 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சொந்த நாட்டு மக்களின் மீது உயிரைமட்டும் கொல்லாத பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்படுகிறது. இதன் காரணமாக இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பார்வையை இழந்துள்ளனர். 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உடல் ஊனமுற்றுள்ளனர். காஷ்மீர் மக்கள் சாதாரணமாக வேலைக்குச்செல்ல, பள்ளி செல்ல என தனது அன்றாட நடமாட்டங்களுக்கே தெருவுக்குத்தெரு ராணுவத்திடம் அடையாள அட்டையைக் காட்டி நடக்க வேண்டுமென்ற நிலை இருக்குமாயின், இந்தியாவின் அரவணைப்பை அந்த மக்கள் எப்படி பாதுகாப்பாக உணர்வார்கள்.
எனவே, காஷ்மீர் மக்கள் மீதான அளவற்றImage result for kashmir bellot attack victims கட்டுப்பாடு, ஆயுதப்படை சிறப்பு அதிகாரம் போன்றவற்றை திரும்பப்பெற்று, இந்தியாவில் ஏனைய மாநிலங்களில் உள்ள மக்கள் எப்படி இந்திய சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறார்களோ அதைப்போலவே காஷ்மீர் மக்களும் தடையற்ற சுதந்திரக்காற்றை சுவாசிக்கும் நாள் வரவேண்டும். அப்போதுதான் பிரிவினைவாதம் பேசுவோருக்கு காஷ்மீர் மக்களே பதிலடி கொடுக்கும் நாளும் வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக