வியாழன், 12 ஏப்ரல், 2018

தமிழகத்திலிருந்து விரட்டப்பட்ட மோடி

ஈராக்கில் ஷூ வீசப்பட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு அடுத்தபடியாக உலகம் முழுவதும் அதிக மக்கள் எதிர்க்கும் ஒரு மனிதர் இருக்கிறாரென்றால் அது மோடிதான். தன் சொந்த நாட்டு மக்களாலேயே கருப்புக்கொடி காட்டப்பட்டு மக்கள் முன்னிலையில் தலையைக்கூட காட்டாமல் தமிழகத்தை விட்டு தலைதெறிக்க ஓடிய பிரதமர் என்றால் அது மோடிதான்.

பாஜக 2014ல் ஆட்சியைப் பிடித்ததற்கு காரணம் பாஜக ஒரு நல்ல கட்சி என்பதாலோ, சிறந்த கொள்கைகளை வைத்துள்ள கட்சி என்பதாலோ, குஜராத்தில் தேனாறும் பாலாறும் ஓடவிட்டதாய் ஓலமிட்டவர்கள் என்பதாலோ அல்ல. மாறாக, காங்கிரசின் இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளாலும், இந்தியப் பொதுத்துறைகளை நாசப்படுத்தியதாலும், ஊழலின் உச்சக்கட்ட பேயாட்டம் போட்டதாலும், முழுக்க முழுக்க கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்கு சாமரம் வீசியதாலும் தான் பாஜக இந்தியாவில் ஆட்சி அமைக்க முடிந்தது. முன்பு வாஜ்பாய் அரசு எப்படி அமைந்தது என்ற கேள்விக்கும் மேற்கூறியதுதான் பதில். 

இந்திய மக்கள் அனைவருக்கும் மிகவும் நன்றாகவே தெரியும் 2002ல் மோடியின் குஜராத் பற்றி எரிந்ததும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களை ஈவிரக்கமின்றி கொன்றொழித்ததற்குப் பின்னால் மோடியும் அமித்ஷாவும் செயல்பட்டார்கள் என்பதும். 
மோடியும், அமித்ஷாவும் குஜராத் மதக்கலவர வழக்குகளிலிருந்து இந்திய நீதிமன்றங்களால் விடுபட்டபோதே இந்திய மக்களுக்கு நீதித்துறை மீதிருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் பாழானது.

நிற்க,  1983-ல் காவிரி தண்ணீருக்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது டெல்டா விவசாயிகள்தான். 19 ஆண்டுகள் தொடர்ந்த 21 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததையடுத்தே தன்னையும் அந்த வழக்கில் சேர்க்குமாறு மனு கொடுத்தது தமிழக அரசு. 1990-ல் நிறுவப்பட்ட காவிரி நடுவர் மன்றம் 17 ஆண்டுகள், 568 அமர்வுகளுக்குப் பிறகு 2007 பிப்ரவரி 5-ல் இறுதித் தீர்ப்பை வழங்கியது. தமிழகத்துக்கு 419 டி.எம்.சி., கர்நாடகத்துக்கு 270 டி.எம்.சி. கேரளத்துக்கு 30 டி.எம்.சி., புதுவைக்கு 7 டி.எம்.சி. என்று ஒதுக்கியது. தமிழகத்துக்கு உரிய 419 டி.எம்.சி.யில் மழைப் பொழிவின் மூலம் கிடைக்கும் அளவு கழிக்கப்பட்டு, 192 டி.எம்.சி.யானது. இந்த நீரின் அளவைத்தான் தற்போது 177.25 டி.எம்.சி.யாகக் குறைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். அதைப்போல, பெங்களூருவின் குடிநீர்த் தேவையைக் கருத்தில் கொண்டு 14.75 டி.எம்.சி. கூடுதலாக வழங்கப்படுகிறது. (தமிழகத்தில் உள்ள மாநகரங்களைப் பற்றி எந்த சிந்தனையும் நீதிபதிகளுக்கு வரவில்லை) இதுவரை நிலுவையில் இருந்த அனைத்து காவிரி நதிநீர் வழக்குகளும் இந்த உத்தரவின் மூலம் முடித்து வைக்கப்படுகின்றன. அடுத்த 15 ஆண்டுகளுக்கு இந்தத் தீர்ப்பு அமலில் இருக்கும். மேல் முறையீடு செய்ய முடியாது என்றும் இத்தீர்ப்பை ஆறு வாரங்களுக்குள் அமல்படுத்தவேண்டும். 

அத்தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் எவ்வாறு அமைக்கவேண்டும்? அதில் யார் யார் இருக்க வேண்டும், என்னென்ன பொறுப்புகள் இருக்க வேண்டும், என்ன படித்திருக்க வேண்டும் என்பது உட்பட காவிரி ஒழுங்காற்று குழுவில் தொழில்நுட்ப வல்லுனர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது உட்பட தெளிவான தீர்ப்பு அளித்த பிறகும் மத்திய பாஜக மோடி அரசு அதனை ஒரு பொருட்டாகவே கொள்ளாமல் கெடு காலம் முடியும் தேதியான 29.3.2018 அன்று 'ஸ்கீம்' என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டும், கர்நாடக தேர்தல் நடைபெறவிருப்பதால் அங்கு இத்தீர்ப்பை அமல்படுத்தும்போது கலவரச்சூழல் ஏற்படும் என்றும், நர்மதா வாட்டர் அத்தாரிட்டி போன்று ஒன்றை ஏற்படுத்திக்கொள்ளலாமா என்றும் விளக்கம் கேட்டு காலம் தாழ்த்தியுள்ளது மத்திய அரசு. 

தமிழகத்தில் நீட் தேர்வை நடத்தக்கூடாது என்று தமிழகம் முழுவதும் மாணவர்கள் எழுச்சியாக போராடிய நிலையில்  தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வில் விலக்கு கேட்டு  ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அத்தீர்மானம் குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேட்கப்பட்டபோது "அது எங்கே இருக்கிறது என்பது எனக்கு தெரியாது" என்று திமிர்த்தனமான பதிலை கூறினார். 

தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடத்தக்கூடாது, கூடங்குளம் அணு உலை வேண்டாம், ஹைட்ரோ கார்பன் எடுக்கக்கூடாது, மீதேன் எடுக்கக்கூடாது, விவசாயிகளின் நிலத்தில் கெயில் குழாய் பதிக்கக்கூடாது, நியூட்ரினோ திட்டம் கூடாது என்று மக்கள், மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டு ஆண்டுக்கணக்கில் போராடி வருகின்றனர். 

ஆனால், அதையெல்லாம் உச்சநீதிமன்ற உத்தரவுகளைக் காரணமாகக் காட்டி 
மோடியின் அடிமை ஆட்சி செய்யும் எடப்பாடியை வைத்துக்கொண்டு தமிழர்கள் மீது காவல்துறை மூலம் ஒடுக்குமுறை செய்து வலுக்கட்டாயமாக திணித்தது மோடி அரசு.

ஆனால், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் கொடுத்த பிறகும் அதைமட்டும் செய்ய மோடி அரசு மறுப்பதற்குப் பின்னால் தமிழகம் பல  பயங்கர விளைவுகளை  சந்திக்கவிருப்பதாகவே தோன்றுகிறது. 

தமிழ்நாட்டை விவசாயத்திலிருந்து முற்றிலும் துரத்திவிட்டு இங்கு ராணுவ தளவாட பகுதியாக்க மத்திய அரசு முனைவதாக தோன்றுகிறது. பாகிஸ்தான் மற்றும் சீனாவின் இலக்குகளுலிருந்து  தமிழகம் வெகுதொலைவியில் இருப்பதால் விவசாயத்தைப் புறந்தள்ளி தமிழகம் ராணுவ பாதுகாப்பு பகுதியாக்க மோடி அரசு முயற்சிக்கிறது. ஆயுதங்கள் தயாரிக்க, ஆயுதங்கள் இருப்பு வைக்க, பகிர்ந்தளிக்க கடல்வழியைப் பயன்படுத்த என தமிழகத்தை ஆயுத களமாக்க பாஜக அரசு முயற்சிக்கிறது என்ற சந்தேகம் வலுத்துவருகிறது. 

காவிரிமேலாண்மை வாரியம் அமைத்தால் காவிரி வழி நீரோடி தமிழகம் விவசாய செழிப்புற்றால் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து மக்கள் வெளியேறமாட்டார்கள் என்பதால் காவிரியை காய்ந்துபோக திட்டமிடுகிறது மத்திய அரசு. 

விவசாயம் பொய்த்து வறுமையால் வேலைதேடி இருக்கும் சொற்ப நிலங்களை விற்றுத்தொலைத்துவிட்டு வெளியேற வேண்டிய சூழலை இந்த மாவட்ட மக்களுக்கு மத்திய அரசு வலிந்து நிர்ப்பந்திக்கிறது. 

அதே நேரத்தில், பாஜக தென்னகத்தில் ஆட்சிக்கு வருவதற்கு கர்நாடகம் சாத்தியமான மாநிலம் என்ற போதிலும் காவிரி மேலாண்மைவாரியம் அமைக்காமல் இருப்பதற்கு அதைவிட பெரிய மேற்கண்ட மெகா பிராஜெக்ட் இருப்பதையே மோடியின் 12.4.2018 வருகை காட்டுகிறது. 

இந்த நிலையில் தமிழகத்தில் போராட்டக்களம் சூடு பிடித்திருக்கிறது. திராவிட கட்சிகள் (அதிமுக திராவிட கட்சியல்ல) கம்யூனிஸ்டுகள் உட்பட அனைத்துக் கட்சியினரும் போராடும் அதே வேளையில் திரையுலகத்தினர் மற்றும் தமிழ்த்தேசிய அமைப்புகளும் களத்தில் இறங்கி போராட்டத்தை கூர்மையாக்கியுள்ளது. 
இவ்வளவு போராட்டத்தையும் மயிரளவுகூட மதிக்காத போக்கு மத்திய அரசிடம் தெளிவாக தெரிகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்போம் என்று மோடியும், மத்திய அரசும் எந்தவித அறிக்கையும் விடாத நிலையில் தமிழக பாஜக தலைவர்கள் வாரியம் அமைக்கப்படும் என்று தமிழக மக்களை ஏமாற்றி வருவது வேடிக்கையாக உள்ளது.

கர்நாடக பாஜக அம்மக்களுக்கு சாதகமாய் இருப்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. தமிழக பாஜகவும் கர்நாடகத்துக்கு சாதகமாய் பேசும் கொடுமையை என்னவென்று புரிந்துகொள்வது? 

இறுதியாக ஒன்றுதான் புரிந்துகொள்ள முடிகிறது. பாஜக ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் எதிரான கட்சி. குறிப்பாக தமிழகத்தை சுடுகாடாக்க பாஜக கடுமையாக முயன்று வருகிறது. தமிழக மக்களை பாதுகாக்க  தமிழகத்திலிருந்து மட்டுமல்ல இந்திய அரசியலிலிருந்தே  பாஜகவை விரட்டி அடிப்பது ஒன்றே வழி!

-இரா.சரவணன்

வியாழன், 3 நவம்பர், 2016

நம்பு... இல்லையென்றால் நீ தேச விரோதி!

- போபால் சிறை நாட்டிலேயே அதிநவீன பாதுகாப்பு கொண்டது.
- சிறைச்சாலையில் பல்லாயிரக் கணக்கான காவலர்கள் கண்ணும் கருத்துமாக பாதுகாப்பு
- ஆயிரக்கணக்கான சி.சி.டி.வி. கேமரா பொருத்தி (வாய்க்குள்ள கரண்டு கம்பிய விட்டு லாக்கப் டெத் நடக்கிறப்ப மட்டும் வேலை செய்யாது) இருக்கும் சிறைச்சாலை.
- 35 அடி சுற்றுப்புற சுவர்
- தொலைநோக்கு கேமராவுடன் கண்காணிப்பு டவர்கள்
இப்ப மேட்டருக்கு வருவோம்...
-8 சிமி விசாரணை கைதிகள்
- ஒவ்வொருத்தனையும் தனித்தனியாதான் விசாரிப்பார்கள்.
- இவனை எப்போ விசாரிப்பார்கள் என்று அவனுக்குத் தெரியாது...அவனை எப்போது விசாரிப்பார்கள் என்று இவனுக்குத் தெரியாது...
- ஒருத்தனுக்கு ஒருத்தன் பாத்துக்கக்கூட முடியாது
- ஒவ்வொருத்தனுக்கும் தனித்தனி பூட்டிய அறை
- எட்டுப்பேரும் ஒரே நேரத்துல சத்தமே கேட்காம தனித்தனி பூட்டிய அறைகளை ஒடைச்சி வெளியில வந்து... 
- சுத்தியிருக்குற சி.சி.டிவி கேமரா கண்ணுல படாம...
- பல்லாயிரக்கணக்கான போலீஸ் ரவுண்ட்சுல இருக்கும்போது ஒருத்தர மட்டும் புடிச்சி கொலை பண்ணி
- போத்திக்கிற பெட்ஷீட்டை மயிரா திரிச்சி... சாரி... கயிரா திரிச்சி
- ஒரு போலீஸ் கண்ணுல கூட படாம அத வைச்சி சினிமாவுல காட்டுறமாதிரி 35 அடி செவுத்துல தூக்கிப்போட்டு (அப்படி தூக்கிப்போட்டா அங்க அது எப்படி மாட்டிக்கிதுன்னுதான் நமக்கும் தெரியல)
- இவ்ளோ ரிஸ்க் எடுத்து...
- ஜெயில தாண்டி வெளியில வந்தவனுங்க...
- ஏதும் வாகனம் ஏற்பாடு செஞ்சி எஸ்கேப் ஆகாம...
- ஆளுக்கொரு பக்கமா தெறிச்சி ஓடாம ரொம்ப கூலா ஒரே குரூப்பா ஒன்னா ஒரு கிராமத்துல போயி விருந்து சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போது....
- அந்த கிராம மக்கள் அவங்கள காட்டிக் குடுத்தாங்களாம்....
- அப்புறம் அந்த எட்டுப்பேரும் காடுமாதிரி இருக்குற இடத்துல ஆளுக்கு ஒருபக்கமா ஓட முயற்சி பண்ணாம
- ஒரு பாறை மேல ஏறி நின்னு போலீஸ்காரங்களுக்கு டாட்டா காட்டுவாங்களாம்....
- தப்பிச்ச சில மணி நேரங்கள்ல அதிநவீன துப்பாக்கி போன்ற ஆயுதங்களால தாக்கினாங்களாம்...
#அப்புறமா இந்த போலீஸ்காரங்க போயி அவங்கள திருப்பித் தாக்குனதுல அத்தன பேரும் செத்துட்டாங்களாம்....
#ஆளுக்கொரு பக்கமா செத்துக் கெடக்கறவனுங்கக்கிட்ட ஒரு தீபாவளி துப்பாக்கிக்கூட இல்லங்குறதுதான் மேட்டரே...!
#சென்னை சென்ட்ரல் ரெயில் குண்டு வெடிப்பு பைல் குளோஸ்.
- செத்தவன்ல ரெண்டு பேரு சென்னை சென்ட்ரல் ரெயில் குண்டு வெடிப்புல சம்பந்தப் பட்டவனுங்களாம்.... முடிஞ்சுதா மேட்டர்...
#இதை நாம் நம்பனும்... இல்லையென்றால் நாம் தேசவிரோதி...!
பாஜக-ஆர்.எஸ்.எஸ்.சின் நோக்கம்
-----
நாடு முழுதும் உள்ள சிறைச்சாலைகளில் விசாரணைக் கைதிகளாக இருக்கின்ற 68 சத முஸ்லீம் இளைஞர்கள் எந்தவிதமான குற்றச்செயல்களோ அப்படி குற்றச் செயல்கள் செய்ததற்கான ஆதரமோ இல்லை.
ஆனால், அவ்வளவு பேுரையும் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து சிறையில் அடைத்து அவர்களின் வாழ்வை சூறையாடிக்கொண்டிருக்கிறது மத்திய மாநில அரசுகள்.
முதலில் முஸ்லீம் இளைஞர்களை பிடித்து வைத்துக்கொண்டு, பிறகு குற்ற நிகழ்வுகளுக்காக காத்திருக்கிறது காவல்துறை.
எனவே, இப்படி தண்டனைக் கைதிகளாக, விசாரணைக்கைதிகளாக இருப்பவர்களை தேர்தல் நேரத்தில் மேற்கண்ட நாடகம் போல் ஒரு நாடகத்தை அரங்கேற்றி என்கவுன்ட்டர் செய்து நாட்டை காப்பாற்றியது போல தேர்தல் ஆதாயம் அடையும்.
பாஜக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற வக்கற்று திணறுகின்ற நேரத்தில் உரி, சர்ஜிகல் ஸ்டிரைக் போன்ற டக்கரடித்து
பசிக்கு சோறு ஊட்டச்சொல்லி மக்கள் போராடுகின்ற வேளையில்....
அவர்களுக்கு தேசபக்தியை ஊட்டுகின்ற வேலையை செய்கிறது.
ஆகமொத்தம் முஸ்லீம்களை தேர்தல் அரசியலுக்கும், தேசப்பற்று அரசியலுக்கும் குஜராத்தில் நடத்தியது போன்று இன்னொரு முறை பயன்படுத்தினால் அது பாஜக - ஆர்.எஸ்.எஸ்சுக்கு பேராபத்தாக முடியும். விழும் அடியிலிருந்து மீளமுடியாத நிலைக்கு போய்விடும் ஆபத்து இருப்பதால்...
தற்போது, குஜராத் ஷொராபுதின், பிரஜாபதி, இர்ஷத் ஜஹான் போன்ற என்கவுன்டர்களைப் போலவும், இந்த என்கவுன்டரைப் போலவும் இனியும் நடக்கும்.
ஏனென்றால் இவர்கள் நேர்மைக்கு மாறானவர்கள். நெஞ்சுக்கு நேராய் நிற்கப் பயப்படுகிறவர்கள்.
இவர்களுக்கு உண்மை, சத்தியம் என்றால் என்னவென்று தெரியாது.
இந்திய மக்களைக் காப்பாற்ற இவர்களிடம் எந்தச் செயலும் இல்லை. ஆனால், மக்களை ஏமாற்ற இவர்களிடம் இருப்பது ஒரே ஒரு சொல்தான் அந்தச் சொல்லின் பெயர் 'தேசப்பக்தி்'
ஏழையின் பசியை இந்த தேசபக்தி போக்காது....
எப்போது எது தேவையோ அதை ஊட்ட வேண்டும்.
தேவையற்ற நேரத்தில் தேவையற்றதை ஊட்டினால் அது உடம்புக்கும் மனதுக்கும் ஒவ்வாததாக்கி, தேசபக்தியாவது மண்ணாங்கட்டியாவது போங்கடா மயிருன்னு சொல்லிவிட்டு போய்க்கிட்டே இருப்பான் நம்மாளு...!

வியாழன், 27 அக்டோபர், 2016

அனைத்து மதத்திற்கும் பொதுவான பொது சிவில் சட்டம் கொண்டுவர பாஜக அரசு நடவடிக்கை

அனைத்து மதத்திற்கும் பொதுவான பொது சிவில் சட்டம் கொண்டுவர பாஜக அரசு நடவடிக்கை
#கோயிலுக்கு போனா கும்பிட விடமாட்டங்கிறான்...
#தெருவுக்குள்ள போன செருப்ப அவுருடாங்கிறான்...
#வாசப்படி வழியா வராதங்கிறான்...
#பொறக்கடை வழியா வாங்கிறான்...
#துண்ட மடிச்சி கக்கத்துல வையிங்குறான்...
#டீ கடைக்கு போனா கொட்டாங்கச்சியில டீ தர்றான்...
#என் சாதிப் பொண்ணுங்கள சைட் அடிக்காதங்கிறான்...
#காதலிச்சி கண்ணாலம் பண்ணா கழுத்த அறுக்குறான்...
#எங்க தேர்ல கை வைக்காதங்கிறான்...
#நாங்களா தேர் இழுத்தாலும் வந்து கொளுத்துறான்...
#தேர்தல்ல நிக்காதங்கிறான்...
#நின்னு ஜெயிச்சா வெட்டி சாகடிக்கிறான்....
#எங்க வீட்ட கொளுத்துறான், சொத்துக்கள திருடுறான்...
#சொத்து வச்சிக்காதடாங்கிறான்...
#அட! அவ்வளவு ஏங்க...ஆண் நாய் வளக்காதங்கிறான்...
#ஏன்டான்னு கேட்டா நீ கீழ் சாதிக்காறங்குறான்....
அதனால...
#முதல்ல இந்து மதத்துக்குள்ள இருக்குற பல்லாயிரக்கணக்கான சாதிகளுக்கும் பொது சிவில் சட்டத்த கொண்டுவந்துட்டு அப்புறம் அடுத்த மேட்டர பத்திப் பேசுங்க....!

புதன், 26 அக்டோபர், 2016

அவன் பேசுவான்... அவனுக்கு தலை மயிருகூட அசையாது....

அவன் பேசுவான்...

அவனுக்கு தலை மயிருகூட அசையாது....

அவன் பேசுவான்...அவனுக்கு தலை மயிருகூட அசையாது....
ஆனால், உனக்கு....
உன் கை நரம்புகள் துடித்து வெளிவரும்
உன் பற்கள் கடித்து உன் உதடுகள் புண்ணாகும்
உன் இதயம் 100 மடங்கு வேகமாய்த் துடிக்கும்
உன் உடம்பி்ல் ரத்த வெள்ளம் பீறிட்டு மோதும்
உன் கண்கள் ரத்தச் சிகப்பாகும்
உன் மூளைநரம்பு முறுக்கேறி வெடிக்கத்துடிக்கும்
வீழ்த்த வேண்டியவனை விட்டுவிட்டு
மண்ணெண்ணெய் புட்டியோடு நீ நிற்பாய்
பழைய பிணங்கள் மதிப்பற்றவையானபின்
இருபது வயதில் புதிய பிணம் தேவை அவனுக்கு
பிரச்சனையை சொல்லும் அவன்
தீர்வை மட்டும் உனக்கு சொல்லமாட்டான்
சரியான பாதையை உனக்குக் காட்ட மறுத்த அவன்
ஒருபோதும் தன்னை மாய்த்துக்கொள்ள மாட்டான்
உன் குடும்ப ஓலங்கள் அவன் காதில் விழாது
அலறல்களை அவன் அசட்டையோடு கடந்துபோவான்
முத்துக்குமார், செங்கொடி எரிந்தபோதும்
இதையேதான் சொன்னான்...!
இப்போதும் சொல்வான்...
இனியொரு தற்கொலை கூடாதென்பான்...
ஊடகங்களில் ஓலமிடுவான்...
நம்பிவிடாதே....!
புரட்சியாளன் எதிரியைத் தவிர்த்து
எவருக்கும் தீயிடமாட்டான்...!
பதிவு: Sara Vanan
Image result for uri attack

காஷ்மீரும் ... கண்டுகொள்ளாத இந்திய மக்களும்...!

காஷ்மீரும் ...கண்டுகொள்ளாத இந்திய மக்களும்...!

இந்தியாவில் ஒவ்வொரு அரசுக்கும் தங்களது தேசப்பற்றை நிலைநாட்ட, உள்நாட்டில் மக்களுக்கு ஏற்படும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், வேலைபறிப்பு போன்ற அவர்களை சீரழிக்கும் வாழ்வியல் பிரச்சனைகளிலிருந்து அவர்களை திசைதிருப்ப, தங்களது ஆட்சியின் ராணுவ வலிமையை நிலைநாட்ட ஒரு போர் தேவைப்படுகிறது. ஆனால், உண்மையில் சொல்லப்போனால் ராணுவத்தின் வலிமை என்பது எப்போதும் எந்த சூழ்நிலையிலும் நிலையானது. அதனை எந்த ஒரு தனி அரசும் எப்போதும் சொந்தம் கொண்டாட முடியாது. ஆனால், அந்த ராணுவ வலிமை தங்களது ஆட்சியில்தான் புதிதாக உருவாக்குவது போன்ற தோற்றத்தை ஒவ்வொரு அரசும் உருவாக்கிக்கொள்ளும்.
இவ்வுலகின் அனைத்து நாடுகளும் அணு ஆயுதம் உட்பட ஆயுதக்குவியலில் மூழ்கித் திளைத்திருக்கும்போது, நாடுகளுக்கிடையேயான போர் எத்தகைய சேதத்தை ஏற்படுத்தும் என்பதை நினைத்துப்பார்க்கவும் முடியாது. எனவே, எந்த ஒரு பிரச்சனைக்கும் போர் ஒரு தீர்வாகாது, தீர்வாக ஆகவும் முடியாது.
இந்த நிலையில் செப்டம்பர் 18 அன்று காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் உரி என்ற இடத்தில் இந்திய ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இந்திய ராணுவ வீரர்கள் 18 பேர் உயிரிழந்தனர். இந்திய ராணுவம் திருப்பித் தாக்கியதில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதன் பின்னணியில் பாகிதான் உள்ளது என்பதை ஆதாரங்களோடு இந்தியா உலக அரங்கிற்கு உணர்த்தியது. உலக அரங்கிலிருந்து பாகிதானை தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது. இதற்குப் பதிலடியாக பாகிதான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் சென்று செப்டம்பர் 29 அன்று சர்ஜிகல் டிரைக் என்ற பெயரில் அறுவை சிகிச்சை செய்து 55 தீவிரவாதிகளையும், 7 தீவிரவாத முகாம்களை அழித்துவிட்டு திரும்பி வந்ததாக ராணுவ தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த வெற்றிக்கு மோடி அரசே காரணம் என்று பாஜக வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்பு பாஜக ஆட்சியில் நடைபெற்ற கார்கில் போர் வெற்றியை இன்றுவரை கொண்டாடி வருகின்றனர். கார்கில் போரில் 527 பேர், சர்ஜிகல் டிரைக்கில் 18 பேர் மட்டுமல்லாது இன்றுவரை தீவிரவாதிகளின் ஊடுருவலால் ஏற்படும் இந்திய வீரர்களின் உயிரிழப்பை விட பாஜகவினருக்கு வெற்றிக் கொண்டாட்டங்களே பெரிதாக தேவைப்படுகிறது.
உள்நாட்டில் இருக்கும் ஏற்றத்தாழ்வாக இருக்கும் சமூக, பொருளாதார, வாழ்வியல்பிரச்சனைகள், விலைவாசி உயர்வு பிரச்சனை, வேலையில்லா திண்டாட்டப் பிரச்சனைகளை திசைத்திருப்ப இப்படிப்பட்ட தேசப்பற்று கொண்டாட்டங்கள் ஆட்சியாளர்களுக்கு தேவைப்படுகிறது.
இதுஒருபுறம் இருக்க, இப்படிப்பட்ட போர்ச்சூழல்கள், தீவிரவாத ஊடுருவல்கள் கட்டுப்படுத்துவது போன்றவற்றிற்கு காரணமாக இருக்கக்கூடிய காஷ்மீர் பிரச்சனையை திறந்த மனதோடு அணுகவேண்டும், இந்தியா பாகிதான் பிரச்சனையை பேசித் தீர்க்க வேண்டும் என்ற கருத்துக்களை முன்வைப்பவர்களை தேசத்துரோகியாக சித்தரிக்கும் வேலையை பாஜக செய்து வருகிறது.
அந்த வகையில் 2014ல் ஆட்சிக்கு வந்த பாஜக, இதுவரை இந்திய மக்கள் தேசப்பற்று என்றால் என்னவென்று தெரியாமல் இருந்தது போலவும், தீடீரென மக்களுக்கு தேசப்பற்று பாடம் எடுக்கவும் தொடங்கியுள்ளது.
தேசப்பற்று என்பது இந்து மதத்தினருக்கு மட்டுமே சொந்தமானது போலவும் மற்ற மதத்தினருக்கு தேசப்பற்று இல்லாதது போலவும் சித்தரிக்கத் தொடங்கி, மதத்தை அரசியலுடன் கலந்து, தேசப்பற்றுடனும் கலந்தது. அதனை, மத வேற்றுமை பாராமல் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் மக்களிடையே பிரச்சாரமாக பாஜக கொண்டு சென்று மக்களை பிரித்தாள சூழ்ச்சி செய்கிறது.
அதன் வெளிப்பாடு, மத அடிப்படைவாதத்தை எதிர்த்தால், மூடநம்பிக்கையை எதிர்த்தால் அது தேசத்தை எதிர்த்தது போலவும் தேசத்துரோகியைப் போலவும் நடத்தப்பட்டு வருகின்றனர்.
தேசப்பற்று என்பது இந்தியா பாகிதான் கிரிக்கெட் போட்டியில் துவங்கி, இன்று நேரடிப் போர் வரைக்கும் காரணமான காஷ்மீர் பிரச்சனையை காரணம் காட்டி இந்திய மக்களுக்கு பாகிதான் மீது வெறியேற்றுவதும், அதே காஷ்மீர் பிரச்சனையை காரணம் காட்டி பாகிதான் மக்களுக்கு இந்தியா மீது வெறியேற்றுவதும் இருநாடுகளுமே தவறாமல் கடைபிடிக்கும் கொள்கைகளாகவே இருந்து வருகிறது. இதில் பாஜக ஆட்சி, காங்கிர ஆட்சி என்ற வேறுபாடில்லை.
இந்தியா பாகிதான் ஆகிய இருநாடுகளுமே உலகமய, தாராளமய, தனியார்மய கொள்கைகளை மிகவும் அதி தீவிரமாக செயல்படுத்தி வரும் அரசுகளையே கொண்டுள்ளன. இந்திய பிரதமர் பெரும் கார்ப்பரேட் முதலாளியான அதானிக்கு சொந்தமான விமானத்தை தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதற்கும், மோடி பதவியேற்பு விழாவிற்கு பாகிதான் பிரதமர் நவாப்ஷெரீபிற்கு அழைப்பு விடுத்தத்தற்குமான காரணத்தை இந்திய சாமானிய மக்கள் புரிந்துகொள்வது மிகவும் கடினம்தான்.
குஜராத்தை ஒட்டியுள்ள பாகிதானுக்கு சொந்தமான மின்னுற்பத்தி நிலையங்களை உலகமயக் கொள்கைகளின்படி தனியார்மயப்படுத்துவதற்கு பாகிதான் எடுத்துள்ள முடிவையொட்டி அந்த மின்னுற்பத்தி நிலையங்களை அதானி குழுமம் வாங்குவதற்கான எடுக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.
பாகிதான் அதன் மாநில அரசுகளின் பொறுப்பில் உள்ள 35சதமான எண்ணெய் நிறுவனங்களை தனியார்மயப்படுத்த எடுத்த முடிவின் அடிப்படையில் இந்திய கார்ப்பரேட் முதலாளியான அம்பானி அந்த நிறுவனங்களை வாங்க முயற்சி எடுக்கிறது.
அதேபோல் பாகிதான் டீல் மில்களை வாங்க இந்திய பெருமுதலாளியான ரத்தன் டாட்டா முயன்று வருகிறார். இதுபோன்று பல இந்திய பெருமுதலாளிகள் பாகிதானில் தொழில் தொடங்க எடுக்கும் முயற்சியையும் எப்படி புரிந்துகொள்வது. அப்படியென்றால் தேசப்பற்று என்பது யாருக்கு?
தேசபக்தி, தேசப்பற்று என்பதெல்லாம் இந்திய அன்றாடங்காய்ச்சி மக்களுக்குதானே தவிர, இந்திய கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கல்ல. இந்தியா-பாகிதான் என்றால் இந்திய அன்றாடங் காய்ச்சிகளுக்குதான் ரத்தமெல்லாம் கொதிக்குமே தவிர இந்திய பெருமுதலாளிகளைப் பொருத்தவரை பணம் கொழிக்கும் இருநாட்டு ஒப்பந்தங்கள்தான்.
இப்படி சாமானியனின் ரத்தம் கொதிப்பதற்கு ஒரே காரணம், காஷ்மீர். இந்திய மக்களைப் பொருத்தவரை காஷ்மீர் என்பது இந்தியாவின் ஏனைய மாநிலங்களுள் ஒன்றினைப்போலவே என்ற சிந்தனை இந்திய மக்களின் மனதில் பதியவைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் காஷ்மீருக்கும் உள்ள வித்தியாசத்தை இருட்டடிப்பு செய்வதன் விளைவாக காஷ்மீர் மக்களுக்கு இந்திய மக்களின் ஆதரவு கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. சுதந்திரத்திற்கு முன்னர் பல்வேறு மன்னர்களின் ஆளுமைக்கு கீழ் இருந்துவந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஆம் ஆண்டு, இந்தியா உடன் இணைப்பதா, பாகிஸ்தானுடன் இணைப்பதா அல்லது தனி நாடாக செயல்படுவதா என்ற குழப்பம் நிலவிய போது காஷ்மீரின் மன்னராக இருந்த ஹரிசிங் மன்னராக இருந்தபோது அரசியல் சட்டப்பிரிவு 370 ஐ உருவாக்கி இந்தியாவுடன் காஷ்மீர் சில நிபந்தனைகளின் பேரில் இணைந்திருப்பது என்று ஒப்பந்தமானது. அதன்படி, இந்திய அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவின் சிறப்பு அந்ததின்படி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டுமே பெருமளவில் மாநில சுயாட்சியை கொடுத்துள்ளது. இதன்படி, இந்திய பாராளுமன்றத்தில் ராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு விவகாரம், ஆகிய துறைகளை தவிர்த்து மற்ற துறைகளில் இயற்றப்படும் எந்த சட்டமும் ஜம்மு காஷ்மீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி அம்மாநிலத்தில் செல்லாது. காஷ்மீரில் பதட்டமான சூழ்நிலை தணிந்த பின், தனித்திருப்பதா? இந்தியாவுடன் இணைவதா? பாகிஸ்தானுடன் இணைவதா என்று காஷ்மீர் மக்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி அதன்படி செயல்படுவது,
மேலும், இந்திய மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டுமே தனிக்கொடியும், தனி அரசியல் சாசனம், பிற மாநிலங்களைச் சார்ந்த மக்கள் காஷ்மீரில் நிலம் முதலான அசையா சொத்து வாங்கமுடியாது, ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்றத்தின் பதவி காலம் ஆறு ஆண்டுகள் ஆகும், மற்ற இந்திய மாநிலங்களின் சட்டமன்ற காலம் 5 ஆண்டுகளாகும். அரசியல் சாசனத்தின் 238 வது பிரிவு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பொருந்தாது. காஷ்மீர் மாநிலத்தில் எல்லைகளைக் கூட்டவோ குறைக்கவோ முடியாது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 21 வது பகுதியில் திருத்தம் செய்து தற்காலிக மற்றும் மாறுதலுக்கு உட்படுத்துதலின் கீழ் 370 வது பிரிவு வரையறுக்கப்பட்டது.
இப்படி சில நிபந்தனைகளின் அடிப்படையில் இணைந்த அந்த மக்களின் மீது தீவிரவாத ஊடுருவல் என்ற காரணத்தைக் காட்டி இந்திய அரசு தங்களது ராணுவ வலிமையைக்கொண்டும், சிறப்பு ஆயுதப்படை அதிகாரத்தைக் கொண்டும் அந்த மக்களை கடுமையான அடக்குமுறைக்கு உட்படுத்துவதும், தீவிரவாதி என பொய்க்காரணங்கள் கூறி அப்பாவி மக்கள் கொல்லப்படுவதும், பெண்களை வன்புணர்வு செய்வதும் என வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதை எப்படி மனிதத்தன்மையோடு ஏற்றுக்கொள்ள முடியும்.
Image result for kashmir bellot attack victims இந்த 70 வருடங்களில் 1லட்சம் காஷ்மீர் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். அங்கு 7 பேருக்கு ஒரு ராணுவ வீரர் என்ற அடிப்படையில் இருக்கின்றனர். காஷ்மீர் மக்கள் சிறப்பு ஆயுதப்படை அதிகாரத்தை திரும்பப்பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 80 நாட்களுக்கும் மேல் நடைபெற்றுவரும் போராட்டத்தில் இதுவரை 88 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சொந்த நாட்டு மக்களின் மீது உயிரைமட்டும் கொல்லாத பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்படுகிறது. இதன் காரணமாக இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பார்வையை இழந்துள்ளனர். 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உடல் ஊனமுற்றுள்ளனர். காஷ்மீர் மக்கள் சாதாரணமாக வேலைக்குச்செல்ல, பள்ளி செல்ல என தனது அன்றாட நடமாட்டங்களுக்கே தெருவுக்குத்தெரு ராணுவத்திடம் அடையாள அட்டையைக் காட்டி நடக்க வேண்டுமென்ற நிலை இருக்குமாயின், இந்தியாவின் அரவணைப்பை அந்த மக்கள் எப்படி பாதுகாப்பாக உணர்வார்கள்.
எனவே, காஷ்மீர் மக்கள் மீதான அளவற்றImage result for kashmir bellot attack victims கட்டுப்பாடு, ஆயுதப்படை சிறப்பு அதிகாரம் போன்றவற்றை திரும்பப்பெற்று, இந்தியாவில் ஏனைய மாநிலங்களில் உள்ள மக்கள் எப்படி இந்திய சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறார்களோ அதைப்போலவே காஷ்மீர் மக்களும் தடையற்ற சுதந்திரக்காற்றை சுவாசிக்கும் நாள் வரவேண்டும். அப்போதுதான் பிரிவினைவாதம் பேசுவோருக்கு காஷ்மீர் மக்களே பதிலடி கொடுக்கும் நாளும் வரும்.